துபாய்: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.
வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின.
படிக்கல் டக்-அவுட்
இந்நிலையில், 39ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இன்று (செப். 26) மோதுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, தேவ்தத் படிக்கல், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் அரை சதம் அடித்து அசத்திய படிக்கல், இம்முறை டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
கடைசியில் கட்டுப்படுத்திய மும்பை
விராட் கோலி, கே.எஸ். பாரத் உடன் இணைந்து பவர்-பிளேயில் துரிதமாக ரன்களைச் சேர்த்தனர். இதனால், எட்டு ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 63 ரன்களை எடுத்திருந்து.ராகுல் சஹாரின் ஒன்பதாவது ஓவரில் பாரத் 32 (24) ரன்களில் சுர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல், விராட் கோலி இணை மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது.
அதிரடி காட்டு வந்த கோலி, தான் சந்தித்த 40ஆவது பந்தில் அரை சதத்தை பதிவுசெய்தார். இருப்பினும், அடுத்த ஓவரிலேயே கோலி 51 (42) ரன்களில் வெளியேறினார். அதன்பின் டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் சில சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்டு ஸ்கோரை உயர்த்தினர்.
அடுத்து, 18ஆவது ஓவரை பும்ரா வீச வந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் மேக்ஸ்வெல்லை 56 (37) ரன்களிலும், நான்காவது பந்தில் டி வில்லியர்ஸை 11 (6) ரன்களிலும் பும்ரா ஆட்டமிழக்கச் செய்து, அந்த ஓவரில் 6 ரன்களை மட்டும் கொடுத்து அசத்தினார். கடைசி ஓவரிலும் ஷாபாஸ் அகமதை கிளீன்- போல்டாக்கிய போல்ட், வெறும் 3 ரன்களையே கொடுத்தார்.
பவர்-பிளேயில் அசத்தல்
இதனால், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தனர். மும்பை பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், மில்னே, ராகுல் சஹார், போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு மும்பை பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. தற்போது மும்பை அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 29 (17) ரன்களுடனும், டி காக் 24 (20) ரன்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: IPL 2021: ரசிகர்களை பதறவைத்து வெற்றி கண்ட சிஎஸ்கே!