துபாய்: கரோனா தொற்று காரணமாக இரண்டு கட்டங்களாக நடைபெற்றுவரும் ஐபிஎல் 2021 சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (அக். 8) லீக் ஆட்டங்கள் நிறைவுபெற உள்ள நிலையில், ஞாயிற்றுகிழமை (அக். 10) பிளே-ஆஃப் சுற்று தொடங்க உள்ளது.
தற்போது, பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய மூன்று அணிகள் தகுதிப்பெற்றுள்ளன. மீதம் உள்ள அந்த நான்காவது இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.
டேபிள் - டாப்பர்கள் மோதல்
அதனால், ஒவ்வொரு லீக் போட்டியும் அனல் பறந்துகொண்டிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் டேபிள் - டாப்பர்களுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 18 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றிபெறும் முதலிடத்திற்கு முன்னேறும்.
தோனியின் ப்ராசஸஸ் தொடருமா
ருதுராஜ், டூ பிளேசிஸ் ஆகியோரின் அதிரடி தொடக்கம் சிஎஸ்கே அணிக்கு பெரும் பலமாக உள்ளது. மொயின் அலி, ராயுடு, ஜடேஜா ஆகியோர் மிடில்-ஆர்டரில் துரிதமாக ரன்கள் சேர்ப்பதனால்தான் சென்னை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கவும், துரத்துவும் முடிகிறது.
பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், கடந்த போட்டியில் பிராவோ, தீபக் சஹார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சாம் கரன், கே.எம். ஆசிப் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இப்போட்டியில் பரிசோதனை முயற்சியாக கிருஷ்ணப்பா கௌதம், சாய் கிஷார், ஜெகதீசன் ஆகியோரை தோனி களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணியின் பேட்டிங்கைத் பொறுத்தவரை மும்பை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சற்று சரிவைத் சந்தித்தது. இருப்பினும், பிருத்வி ஷா, தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் என மிரட்டலான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. அஸ்வின், ரபாடா, நோர்க்கியா, ஆவேஷ் கான் என உலகத்தர பந்துவீச்சையும் டெல்லி வைத்துள்ளது.
முதலிட வேட்கை
இவ்விரு அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியிருந்தது.
ஆதலால், கடந்த முறை பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க சென்னை அணியும், முதலிட வேட்கையில் டெல்லி அணியும் இன்றையப் போட்டியை எதிர்நோக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி