துபாய்:ஐபிஎல் 2021 தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை நிதானமாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் அக்பர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சென்னையில் அதிகபட்சமாக ராயுடு 55 ரன்களை எடுத்தார்.
டல்லான டெல்லி
இதையடுத்து, டெல்லி அணி 137 ரன்கள் எனும் வெற்றி இலக்கோடு களமிறங்கியது. ஆனால், டெல்லி பேட்டர்கள் பிருத்வி ஷா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷபம் பந்த் என அடுத்தடுத்து வெளியேறினர்.
அறிமுக வீரர் ரிபல் படேல் 18 (20) ரன்கள் எடுத்து ஏமாற்றினார். மும்பை அணியுடனான கடந்த போட்டியில் டெல்லியை காப்பாற்றிய அஸ்வின், இம்முறை சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார். நிலைத்து நின்று விளையாடி வந்த தவான் 39 (35) ரன்களில் ஆட்டமிழக்க, சென்னை அணி சிறிது நம்பிக்கை பெற்றது.
கேட்சும் போச்சு; மேட்சும் போச்சு
பின்னர், ஹெட்மயர், அக்சர் படேல் ஜோடி சற்று பொறுமை காட்டியது. பிராவோ 18ஆவது ஓவர்தான் முதல் ஓவராக வழங்கப்பட்டது. அந்த ஓவரின் நான்காவது பந்தை ஹெட்மயர் லாங்-ஆன் திசையில் தூக்கி அடிக்க, சென்னை வீரர் கிருஷ்ணப்பா கௌதம் தனது கைகளுக்கு வந்த கேட்ச்சை தவறவிட்டு, அணியின் வெற்றியையும் தவறவிட்டார்.
கடைசி 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டே பந்துகளில் 4 ரன்களை டெல்லி எடுத்தது. மூன்றாவது பந்தில் அக்சர் படேல் 5 (10) ரன்களில் பெவிலியன் திரும்ப, ஆட்டம் பரபரப்பானது.
இருப்பினும், நான்காவது பந்தை ரபாடா பவுண்டரிக்கு விரட்ட, 19.4 ஓவர்களில் இலக்கை கடந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றிபெற்றது.
இதன்மூலம், 20 புள்ளிகள் டெல்லி முன்னேறி, சென்னையை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. இதேபோல், இந்தியாவில் நடைபெற்ற முதல்கட்ட லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் லீக் தொடரில் இன்று (அக். 5) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இதையும் படிங்க:INDIA vs BANGLADESH: சுனில் சேத்ரியின் 76ஆவது கோலால் டிராவானது ஆட்டம்