தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021: பிளே-ஆஃப் சுற்றில் பெங்களூரு; பாவம் பஞ்சாப் - PBKS

ஐபிஎல் தொடரின் 48ஆவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தி பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

பிளே-ஆஃப் சுற்றில் பெங்களூரு
பிளே-ஆஃப் சுற்றில் பெங்களூரு

By

Published : Oct 3, 2021, 10:23 PM IST

சார்ஜா: கரோனா காரணமாகப் பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.

இந்நிலையில், 48ஆவது லீக் ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று மாலை மோதின.

மேக்ஸ்வெல் அரைசதம்

இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 57 (33) ரன்களையும், படிக்கல் 40 (38) ரன்களையும் எடுத்தனர். பஞ்சாப் அணி பந்துவீச்சில் முகமது ஷமி, ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடைசி ஓவரில்தான் ஷமி மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ராகுல் - அகர்வால் வெறியாட்டம்

இதன்பின்னர், களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கே. எல். ராகுல், மயாங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 91 ரன்களை குவித்தது. முதலில், கே.எல். ராகுல் 39 (35) ரன்களில் வெளியேற, அடுத்து வந்த நிக்கோலஸ் பூரனும் 3 (7) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அரைசதம் கடந்து அதிரடி காட்டி வந்த அகர்வால் 57 (42) ரன்களில் சஹால் பந்துவீச்சில் வீழ்ந்தார். அவரை தொடர்ந்து சர்ப்ராஸ் கான் ரன் ஏதும் இன்றியும், மார்க்ரம் 20 (14) ரன்களிலும் வெளியேற பெங்களூரு போட்டியை தன்வசம் திருப்ப முயன்றது.

பின்தங்கிய பஞ்சாப்

சற்று அதிரடி காட்டிய ஷாருக்கான் கடைசி ஓவரில் ரன்-அவுட்டாகி ஏமாற்ற, போட்டி பரபரப்பானது. மேலும், கடைசி 2 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹென்ரிக்ஸ் 7 ரன்களை மட்டுமே சேர்த்ததால் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. மேலும், அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம் புள்ளிப்பட்டியில், பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டும் மீதம் உள்ள நிலையில், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளின் வெற்றித் தோல்வியே பஞ்சாப்பின் பிளே-ஆஃப் சுற்று கனவை நினைவாக்கும் என்பது நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிங்க: துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்: தொடர்கிறது இந்தியாவின் தங்க வேட்டை

ABOUT THE AUTHOR

...view details