சார்ஜா: கரோனா காரணமாக பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.
இந்நிலையில், 46ஆவது லீக் ஆட்டத்தில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் விளையாடி வருகிறது. சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
டெல்லி டாப்-ஆர்டர் காலி
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, டெல்லி அணிக்கு 130 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 33 (26) எடுத்தார். டெல்லி அணி பந்துவீச்சு தரப்பில் ஆவேஷ் கான், அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, டெல்லி அணி தொடக்க பேட்ஸ்மேன்கள் ஷிகார் தவான் 8 (7), பிருத்வி ஷா 6 (7), ஸ்டீவ் ஸ்மித் 9 (8) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். சற்றுநேரம் தாக்குப்பிடித்த கேப்டன் ரிஷப் பந்த் 26 (22) ரன்களில் வெளியேற டெல்லி, 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஸ்ரேயஸ் - அஸ்வின்
மறுமுனையில் ஸ்ரேயஸ் ஐயர் நிதானமாக ஆடி வந்தார். இருப்பினும், அக்சர் படேல் 9 (9) ரன்களிலும், ஹெட்மயர் 15 (8) ரன்களிலும் பெவிலியன் திரும்ப, டெல்லி மீண்டும் நெருக்கடிக்கு உள்ளானது. இந்நிலையில், ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் - அஸ்வின் ஆகியோர் பொறுப்புடன் ஆடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
டெல்லி அணி, 19.1 ஓவர்களில் இலக்கை கடந்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதன்மூலம், புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளைப் பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு டெல்லி அணி தகுதிபெற்றது.
மேலும், மும்பை அணி 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் முறையே 10 புள்ளிகளுடன் நான்காவது, ஐந்தாவது இடத்தில் உள்ளன.
மங்கும் மும்பை
டெல்லி அணிக்கு எதிராக தோல்வியடைந்தது மூலம் மும்பை அணிக்கு பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மங்கியுள்ளது. அடுத்துவரும் இரண்டு போட்டிகளை மும்பை வென்றாலும், ரன்ரேட் குறைவாக உள்ளதால் பிற அணிகளின் வெற்றி, தோல்விதான் மும்பையின் பிளே-ஆஃப் வாய்ப்பை நிர்ணயம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: RR vs CSK: சென்னை பேட்டிங்: ராஜஸ்தானில் 5 மாற்றங்கள்