சார்ஜா: கரோனா காரணமாக பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.
இந்நிலையில், 46ஆவது லீக் ஆட்டத்தில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் விளையாடி வருகிறது. சார்ஜாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
ரோஹித் வெளியேற்றம்
மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, குவின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், மும்பைக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
ஆவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில் ரோஹித் 7 (10) ரன்களுக்கு ராபாடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், டி காக் உடன் இணைந்து பவர்பிளேவில் சீராக ரன்களைச் சேர்த்தனர். இதனால், மும்பை அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 35 ரன்களை எடுத்தது.