துபாய்: கரோனா பெருந்தொற்று காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி துபாயில் தொடங்கியது.
இத்தொடர் துபாய், அபுதாபி, சார்ஜா என மூன்று இடங்களில் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று (செப். 27) நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
சாம்சன் 3 ஆயிரம்
இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அணியின் கேப்டன் சாம்சன் 82 (57) ரன்களைக் குவித்தார். மேலும், சாம்சன் ஐபிஎல் தொடரில் மூன்றாயிரம் ரன்களைக் கடந்தார். பந்துவீச்சுத் தரப்பில் சித்தார்த் கவுல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பவர்பிளேயில் 63/1
இதனையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஜேசன் ராய், சாஹா ஆகியோர் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஆறாவது ஓவரில் சாஹா 18 (11) ரன்களில் வெளியேற பவர்பிளே முடிவில் 63 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது ஹைதராபாத் அணி.
அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஜேசன் ராயுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். ராகுல் திவாத்தியா வீசிய 11ஆவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அரைசதத்தைக் கடந்தார். இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்த நிலையில், ஜேசன் ராய் 60 (42) ரன்களில் சக்காரியாவிடம் வீழ்ந்தார். ப்ரியம் கர்க் முஸ்தபிஷூர் பந்துவீச்சில் டக்-அவுட்டாகி வெளியேறினார்.
இதன்பின்னர், இறங்கிய அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்காமல் வில்லியம்சன் உடன் களத்தில் நின்றார். இந்நிலையில், 19ஆவது இரண்டு பவுண்டரிகளைத் தொடர்ச்சியாகப் பறக்கவிட்ட வில்லியம்சன், தனது அரைசதத்தைப் பதிவுசெய்தது மட்டுமில்லாமல் ஹைதராபாத் அணிக்கு இத்தொடரின் இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தார்.
ராய் ஆட்டநாயகன்
இதன்மூலம், ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. வில்லியம்சன் 51 (41) ரன்களுடனும், அபிஷேக் சர்மா 21 (16) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜஸ்தான் பந்துவீச்சில் லோம்ரோர், சக்காரியா, முஸ்தபிஷூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஹைதராபாத் அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்து அரைசதம் அடித்த ஜேசன் ராய் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்றையப் போட்டிகள்
ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இந்திய நேரப்படி இன்று (செப். 28) மதியம் 3.30 மணிக்கு சார்ஜாவில் மோதுகின்றன. மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி அபுதாபியில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றது.
இதையும் படிங்க:டோக்கியோ வீராங்கனை பவானி தேவியின் வாளை ஏலத்திற்கு விட்ட பிரதமர்