தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

MENTOR vs CAPTAIN: சார்ஜா யாருக்கு சாதகம் - பிளே-ஆஃப் நோக்கி சிஎஸ்கே - IPL 2021 LEAGUE

ஐபிஎல் 2021 தொடரின் பெங்களூரு - சென்னை அணிகளுக்கு இடையேயான 35ஆவது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று (செப். 24) இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது.

RCB vs CSK MATCH
RCB vs CSK MATCH

By

Published : Sep 24, 2021, 7:10 AM IST

சார்ஜா:ஐபிஎல் தொடரில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் அணிகள் மோதிக்கொள்ளும் போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் இனம்புரியாத உற்சாகம் உண்டாகும். சென்னை - மும்பை , மும்பை - பெங்களூரு, சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி என்றால் அதுதான் அன்றைய ஹாட் - டாபிக்.

அந்த வகையில், கரோனா தொற்று காரணமாக தடைப்பட்டு போன ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

சார்ஜாவில் இன்று...

மும்பையை வீழ்த்திய சென்னை, முரட்டு ஃபார்மில் இருக்கும் கொல்கத்தா, ராஜஸ்தானின் எழுச்சி, டாப் கியரில் செல்லும் டெல்லி என இந்த ஐபிஎல் தொடரும் டி20 கிரிக்கெட் பார்வையாளர்களை சிறிதும் ஏமாற்றவில்லை.

இந்நிலையில், சார்ஜாவில் நடைபெறும் ஐபிஎல் 2021 சீசனின் 35ஆவது லீக் ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று(செப்.24) மோதுகிறது.

சிறு சிக்கலில் சென்னை

தற்போது, புள்ளிப்பட்டியலில் சென்னை, பெங்களூரு அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தில்தான் உள்ளன. இரு அணிகளும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நோக்கத்தில், இன்று கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

முன்னதாக, இந்த தொடரின் முதல்கட்ட லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது. அப்போட்டியில், ஜடேஜா, தாஹிர் ஜோடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பெரும் பங்காற்றியது.

அதேபோல் சென்னை அணி பந்துவீச்சில் தற்போதும் பலமாகவே காணப்படுகிறது. ஆனால், பேட்டிங்கை பொறுத்தவரை ஓப்பனிங் பேட்டர்கள் அமைத்து கொடுக்கும் அடித்தளத்தை மிடில் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்புடன் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினால்தான், சிஎஸ்கே பெரிய ஸ்கோரை கட்டியெழுப்ப இயலும்.

மும்பை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ராயுடு, தீபக் சஹார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இப்போட்டியில், இருவரும் களமிறங்குவது சற்று கடினம்தான் என்றாலும், சாம் கரண் அணியுடன் சேர்ந்திருப்பதால் சென்னை அணியன் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில் அசாரூதினா?

முதற்கட்டப் போட்டிகளில் புயலாக இருந்த பெங்களூரு, தற்போது அனைத்து பிரிவிலும் சற்று வலுவிழந்து காணப்படுகிறது. படிக்கல், கோலி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என நான்கு சிறந்த பேட்டர்கள் இருந்தாலும், அவர்களின் ஃபார்ம் இன்னமும் கேள்விக்குறியாக தான் உள்ளது.

இவர்கள் சிறப்பாக பங்களித்தாலும், ஐந்தாவது பேட்டரான மற்றொருவர் தான் பெங்களூரு அணிக்கு புரியாத புதிராக உள்ளது. அணி நிர்வாகமும் சச்சின் பேபி, ராஜத் பட்டீதர், ஷாபாஸ் அகமது ஆகியோரை மாற்றி மாற்றி களமிறக்கி பார்த்தும் பெரிதாக எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

ஒரு பரிசோதனை முயற்சியாக, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சயீத் முஷ்டாக் அலி தொடரில் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்திய முகமது அசாரூதினுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வல்லுநர்கள் மத்தியில் குரல்கள் எழுந்துள்ளன.

டாஸ் முக்கியம் பாஸ்...

பெங்களூரு அணியின் புதுவரவான ஹசரங்கா, கடந்த போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படலாம். ஜேமீசன், சிராஜ், ஹர்ஷல் படேல் ஆகியோரின் வேகக்கூட்டணி பவர்பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்றைய போட்டி நடைபெறவுள்ள சார்ஜா ஆடுகளம் பேட்டர்களுக்கும் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ஷார்ட் பவுண்டரிகள் இருப்பதால் பேட்டர்கள் ரன்கள் குவிக்க அதிக வாய்ப்புள்ளதால், டாஸ் இந்தப் போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும்.

சமீபத்தில், டி20 உலகக்கோப்பை இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருந்தார். மேலும், இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட உள்ளதால், மைதானத்தில் இருவரின் செயல்பாடுகள் அதிக கவனத்திற்கு உள்ளாகும்.

சோ... ஒன் லாஸ்ட் டைம்

விராட் கோலி பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்த தொடரோடு விலகுவதாக அறிவித்திருந்தார். ஒருவேளை பெங்களூரு அணியோ, சென்னை அணியோ பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறவில்லை என்றால், இது, தோனி vs கோலி- இன் கடைசிப் போட்டியாகக் கூட மாற வாய்ப்புள்ளது.

இதுவரை இந்த இரு அணிகளும் 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில், சென்னை 18 போட்டிகளிலும், பெங்களூரு 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: IPL 2021: வெங்கடேஷ், திரிபாதி அட்டாக்கால் ஆட்டம் கண்டது மும்பை!

ABOUT THE AUTHOR

...view details