அபுதாபி: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.
பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
பவர்பிளேயில் அதிரடி
இதையடுத்து, இரண்டாம் கட்டப்போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 34ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இன்று (செப். 23) விளையாடிவருகிறது.
இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, குவின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி, பவர்பிளே ஓவர்களை பந்தாடினர்.
ஆறு ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்களை எடுத்தது. குறிப்பாக, குவின்டன் டி காக் சிக்ஸர், பவுண்டரி என ரன்களை குவித்து வந்தார்.
டி காக் அரைசதம்
இதனிடையே, சுனில் நரைனின் ஒன்பதாவது ஓவரில், ரோஹித் நான்கு பவுண்டரிகள் உள்பட 33 (30) ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 5 (10) ரன்களில் பிரசித் கிருஷ்ணாவிடம் வீழ்ந்தார்.
மறுபுறம், விரைவாக ரன்களை சேர்த்து வந்த டி காக், தான் சந்தித்த 37ஆவது பந்தில் அரை சதத்தைப் பதிவு செய்தார். ஐபிஎல் தொடரில், இது அவரின் 16ஆவது அரை சதமாகும்.
அரைசதம் அடித்த அடுத்த ஓவரிலேயே, டி காக் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். டி காக், 42 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 55 ரன்களை எடுத்திருந்தார்.
பிரசித்தை பொளந்த பொல்லார்ட்
அதன் பின்னர், பொல்லார்ட் களமிறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே பிரசித் கிருஷ்ணாவுடன், அவருக்கு சிறு கருத்து மோதல் ஏற்பட்டது. அதே சமயம், இஷான் கிஷன் 14 (13) ரன்களில் பெர்குசன் பந்துவீச்சில் வெளியேறினார். பெர்குசன் வீசிய அந்த 17ஆவது ஓவரில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
அதற்கடுத்த ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச வந்தார். முதல் பந்தில் குர்னால் ஒரு ரன் எடுத்து, பொல்லார்ட் இடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். பிரசித் கிருஷ்ணா அடுத்தடுத்த பந்துகளில், சிக்சர், பவுண்டரி, டபிள்ஸ் என பொல்லார்ட் பொளந்துக் கட்டினார். அந்த ஓவரில் நோ-பால் ஒன்றும் வீசப்பட்டது. இதனால், 18ஆவது ஓவரில் மட்டும் 18 ரன்களை குர்னால் - பொல்லார்ட் ஜோடி குவித்தது.
இதற்கடுத்து, கடைசி ஓவரில் பொல்லார்ட் 21 (15) ரன்களிலும் குர்னால் பாண்டியா 12 (9) ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி பந்துவீச்சு தரப்பில், பிரசித் கிருஷ்ணா, பெர்குசன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
கொல்கத்தா அணி, தற்போது 12 ஓவர்களில் 128/2 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி... வலிமை பட 'கிளிம்ப்ஸ்' ரிலீஸ்!