அபுதாபி: நடப்பு 14ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாம்கட்டப் போட்டிகள் நேற்று (செப். 19) தொடங்கின. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையடுத்து, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இன்று (செப். 20) மோதுகிறது.
மீளுமா கேகேஆர்?
புள்ளிப்பட்டியலில், கொல்கத்தா அணி 2 வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், பெங்களூரு அணி 4 போட்டிகளை வென்று 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் நடைபெற்ற முதல்கட்ட போட்டிகளில் கொல்கத்தா அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சற்று பின்தங்கி இருந்தது.
தொடக்க வீரர்கள் சுப்மன் கில், நிதிஷ் ராணா ஆகியோர் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், நிலைத்து நின்று ஆடி ரன் சேர்க்க தவறுகின்றனர். ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ரஸல், இயான் மார்கன் என மிடில்-ஆர்டர் பலமாக காணப்படுகிறது.
இதில், ரஸ்ஸல் மட்டும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடியிருக்கிறார். மற்றவர்கள் தொடர்ச்சியாக விளையாடவில்லை என்பதால் இது மேலும் அவர்களுக்கு சில சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை பாட் கம்மின்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக டிம் சவுத்தி சேர்க்கப்பட்டுள்ளார். கூடுதலாக, வேகப்பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, நாகர்கோட்டி ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் ஷகிப் அல்-ஹாசன், வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் அணிக்கு வலுசேர்கின்றனர்.
பலமான பெங்களூரு
பெங்களூரு அணியை பொறுத்தவரை வழக்கம்போல் படிக்கல், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என பேட்டிங் வரிசை மிரட்டலாக உள்ளது. அணியில் புதுவரவாக இலங்கை வீரர்கள் ஹசரங்கா, சமீரா ஆகியோர் சேர்ந்துள்ளனர்.
சஹால் உடன் ஹசரங்கா இணைந்து சுழல் ஜாலம் நடத்த வாய்ப்புள்ளது. வேகப்பந்துவீச்சில் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் கொல்கத்தா பேட்ஸ்மேன்களை மிரட்ட காத்திருக்கின்றனர். ஹர்ஷல் படேல் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இத்தொடரில் அதிக விக்கெட்டைகளை எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடைபெற்ற இரு அணிகள் மோதிய லீக் போட்டியில், பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் மோதும் 31ஆவது லீக் போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது.
இதையும் படிங்க: CSK vs MI: வீழ்ந்தது மும்பை; முதலிடத்தில் சென்னை