துபாய்: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம் கட்டப்போட்டிகள் இன்று முதல் தொடங்கியது. இந்நிலையில், 30ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
போல்ட் - மில்னே பாட்னர்ஷிப்
அதன்படி களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்கள், மும்பை அணியின் வேகப்பந்துவீச்சுக்கு போட்டிப்பாம்பாக அடங்கினர். போல்ட் வீசிய முதல் ஓவரில் டூ ப்ளேசிஸ் டக்-அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மில்னேவின் அடுத்த ஓவரில் மொயின் அலி டக்-அவுட்டாகி வெளியேறினார்.
அதே ஓவரின் கடைசி பந்தில் வலது முழங்கையில் பந்து தாக்கியதில், அம்பதி ராயுடு வலியால் துடித்துள்ளார். வெறும் மூன்று பந்துகளை சந்திருந்திருந்த நிலையில், 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார்.
அதன்பின், ரெய்னா 4 ரன்களுக்கும், தோனி 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். அப்போது களமிறங்கிய ஜடேஜா, ரூதுராஜ் உடன் இணை சேர்ந்தார். இருவரும் ஆரம்பம் முதல் நிதானம் காட்டியதால், 11 ஓவர்கள் வரை சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களையே எடுத்தது.
கடைசிநேர வாணவேடிக்கை
ரூதுராஜை தட்டிக்கொடுக்கும் சூர்யகுமார்
அடுத்து, குர்னால் பாண்டியா வீசிய 12ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ்ர், 2 பவுண்டரி உள்பட மொத்தம் 18 ரன்களை குவித்து, இந்த ஜோடி ரன் வேகத்தை அதிகப்படுத்தியது. இதனிடையே, ரூதுராஜ் 41 பந்துகளில் அரைசதத்தை பதிவுசெய்தார். மறுமுனையில், ஜடேஜா 26 (33) ரன்களில் பும்ராவிடம் விக்கெட்டை இழக்க, சென்னை அணி 17ஆவது ஓவரில்தான் 100 ரன்களை எடுத்தது.
அதையடுத்து, போல்ட் வீசிய 19ஆவது ஓவரில் ரூதுராஜ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர்; பிராவோ இரு இரண்டு சிக்ஸர்கள் என 24 ரன்களை எடுத்து மிரட்டினர். பும்ராவின் கடைசி ஓவரில் பிராவோ 23(8) ரன்களில் இரண்டாம் பந்தில் வெளியேறினார்.
இருப்பினும், இறுதியில் ரூதுராஜ் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க, சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது. ரூதுராஜ் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் 88 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி பந்துவீச்சில் போல்ட், மில்னே, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையும் படிங்க: தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு!