டெல்லி: ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகின்றது. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (மே 1) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை அணி பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் என தொடர்ச்சியாக ஐந்து அணிகளை வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் என்றைக்குமே சோடை போகாத குதிரை என்று சென்னை மீண்டும் நிரூபித்துள்ளது. சென்னை அணியின் பலம் என்றால் தோனி என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட தோனிக்கு பலம் என்னவென்றால் அணியின் கட்டமைப்பில் அவருக்கு இருக்கும் நம்பிக்கைதான்.
ருத்துராஜ் ஆரம்பப் போட்டிகளில் சொதப்பினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளித்தன் மூலம் தனது இயல்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். கடந்த மூன்று போட்டிகளில் சென்னை அணியின் குறைந்தபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்பது 74 ரன்கள் என்றால் அதற்கு காரணம் டூ பிளேசிஸ் ருத்ராஜ் இருவரும்தான். ராயுடு, ரெய்னா, தோனி, சாம் கரன் ஆகியோர் மிடில் ஆர்டரில் மிரட்டும்படி ஆடினால் அது சென்னை அணிக்கு பெரும் வெற்றியை பெற்று தரும்.
பந்துவீச்சில் தீபக் சஹார், இங்கிடி, சர்துல் தாக்கூர், சாம் கரன், மொயின் அலி, ஜடேஜா மும்பை பேட்ஸ்மேன்களை புரட்டி எடுக்க காத்திருக்கின்றனர். தாக்கூர் இத்தொடரில் பெரிதும் சோபிக்கவில்லை என்பதால் இன்று அவர் மேல் கூடுதல் அழுத்தம் இருக்கும்
மும்பை அணி விளையாடிய ஆறு போட்டிகளில் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வியுற்று, கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகளை வென்றுள்ளது. ரோஹித், டி காக் இருவரும் மும்பைக்கு பொறுப்பான தொடக்கத்தை கொடுத்தால் மும்பை அப்போட்டியில் வெற்றி பெறுகிறது. ஆகையால் இன்றும் சென்னையை வீழ்த்த சிறப்பான தொடக்கம் அவசியம்.