நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கிவருகிறது. டெல்லி, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் என நாட்டின் பல நகரங்களும் இதுவரை சந்தித்திடாத நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்த நிலையிலும் மும்பை, சென்னை, டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றும், நடைபெறத் தயாராகியும் வருகின்றன.
ஐபிஎல் மட்டுமின்றி உலகெங்கிலும் பல விளையாட்டுத் தொடர்கள் நடைபெற்றுவந்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் கிரிக்கெட்டும், சினிமாவும்தான் வெகுஜனங்களின் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை இந்த ஐபிஎல் தொடர் உணர்த்துகிறது.
ஐபிஎல் தொடரின் இந்தியா - ஆஸ்திரேலியாவாகக் கருதப்படும் பெங்களூரு - சென்னை அணிகளுக்கு இடையேயான ஆட்டம்தான் இவ்வளவு ரணகளத்திற்கும் மத்தியில் இன்றைய ஹாட் டாபிக்.
மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா அணிகளை சேப்பாக்கத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வான்கடேவிலும் பணியவைத்த கோலியின் படை இன்று சென்னையிடம் தனது செய்கையைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
படிக்கல், கோலி, ஏபி டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என இந்த நான்கு பேட்டிங் அரண்களையும் தகர்த்தெறிந்து சென்னை தனது வெற்றிப் பயணத்தைத் தொடருமா என்ற கேள்வி எழுந்தாலும் திருப்பி அடிப்பதில் வல்லமை உடையது தோனியின் படை.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின், சுதாரித்துக்கொண்ட சிஎஸ்கே அடுத்தடுத்து வெற்றியைக் குவித்துவருகிறது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது சீரற்ற பந்துவீச்சினால், போட்டியை நழுவவிட பார்த்தது சென்னை. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் பலனாக அந்த ஆட்டத்தை தன்வசமாக்கியது.
சிஎஸ்கேவின் பந்துவீச்சு இன்னும் மெருகேற வேண்டும். கடந்த போட்டியில் களமிறங்காத பிராவோ இன்றையப் போட்டியிலும் களமிறங்காவிட்டால் சிஎஸ்கேவின் டெத் ஓவர் பவுலிங்கில் பெரும் பின்னடைவை ஏற்படும் என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
டி20 போட்டிகளுக்கு உண்டான சிறப்பு, ஒவ்வொரு போட்டியும் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதுதான். இவ்விரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் மோதி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 போட்டிகளிலும் 9 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வென்றுள்ளன.
கடந்த கால பெருமிதங்கள் எந்தவிதத்திலும் இப்போட்டியில் கைகொடுக்காது என்பதால் இரு அணிகளும் தங்களது கிளாஸ் ப்ளஸ் மாஸான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தும்.