மும்பை: ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ். தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய டூ பிளேசிஸ், ருத்துராஜ் ஆகியோர் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி பவர்பிளேயில் 51 ரன்கள் எடுத்து அசத்தியது.
சென்னை அணியின் ஸ்கோர் 74-0 ஆக இருந்தபோது, ருத்ராஜ் 33(25) ரன்களில் சாஹல் சுழலில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறங்கிய ரெய்னா 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 24(18) ரன்களிலும், டூ பிளேசிஸ் 50(41) ரன்களிலும் ஹர்ஷல் பட்டேல் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சிறிதுநேரம் தாக்குபிடித்த ராயுடு 14(7) ரன்களில் வெளியேற, கேப்டன் தோனி களமிறங்கினார்.
19ஆவது ஓவரில் சிராஜ் கட்டுக்கோப்பாக பந்துவீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அப்போது சென்னை அணி 154 ரன்களையே எடுத்திருந்தது.
கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் விளாசிய ஜடேஜா அசத்தினார். அடுத்த பந்தை நோ-பாலாக ஹர்ஷல் வீச அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸர் பறக்கவிட்டு ஜடேஜா ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரைசத்தைப் பதிவுச் செய்தார். ஐந்தாம், ஆறாம் பந்தில் முறை சிக்ஸர், பவுண்டரி அடிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை குவித்துள்ளது.
கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா 37 ரன்களை எடுத்து 62(28) ரன்களிலும், தோனி 2(3) ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு தரப்பில் ஹர்ஷல் பட்டேல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்