ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் ஆட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேட்பன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சோபிக்காத கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்
இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா, ஷுப்மன் கில் களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 19 பந்துகளில் 11 ரன் எடுத்து ஆட்டமிழந்த வேளையில், அடுத்துவந்த திரிபாதி, ரானாவுடன் ஜோடி சேர்ந்தார். 25 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த ரானா, சேத்தன் சகாரியா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதற்கடுத்து வந்தவர்களில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுதடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் அணி வீரர் மோரிஸ் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர், யசஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜோஸ் பட்லர் 5 ரன்களுடன் அவுட் ஆகி வெளியேற, அடுத்த விக்கெட்டுக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். 17 பந்துகளில் 5 பவுண்டர்களை விரட்டிய யசஸ்வி ஜெய்ஸ்வால் (22 ரன்கள்), சிவம் மவி வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்ததாக சிவம் துபே-சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிவம் துபே(22 ரன்கள்), ராகுல் தெவாட்டியா(5 ரன்கள்) ஆகியோரின் விக்கெடுகள் அடுத்தடுத்து சரிந்தாலும், கேப்டன் சஞ்சு சாம்சன் இறுதிவரை நிதானமாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியாக 18.5 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன்(42 ரன்கள்), டேவிட் மில்லர்(24 ரன்கள்) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பந்துவீச்சில் அசத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் கிரிஸ் மோரிஸ் மேன் ஆஃப் தி மேட்ச் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.