மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில்பஞ்சாப், சென்னை, பெங்களூரு அணிகளுக்கு எதிராகத் தோல்வியைத் தழுவி கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. டெல்லி அணியோடு மட்டுமே மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வென்றது
தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ராஜஸ்தானின் தொடக்க வீரர்கள் திணறிவருகிறார்கள். பட்லர் ஓரளவுக்குச் சூழலைப் புரிந்து ஆடினாலும், மனன் வோராவோ மனம்போன போக்கில் விளையாடிவருகிறார். நான்கு போட்டிகளில் 12, 9, 14, 7 என வோரா 42 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்தத் தொடரில் பட்லர் - வோரா இணையின் அதிகபட்ச பாட்னர்ஷிப் 30 ரன்கள்தான்.
டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் ரன்களைக் குவிப்பதென்பது இன்றியமையாத ஒன்று என்னும்போது, இந்த இணை ரன்களைச் சேர்க்கத் தவறுகிறது.
ராஜஸ்தானின் பரிதாபகரமான நிலைக்கு இதுவே முதல் காரணம். மேலும், ராஜஸ்தானின் நிலையற்ற பேட்டிங் நடுவரிசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடந்த போட்டியில் ரியான் பராக், சிவம் தூபே, ராகுல் திவாத்தியா சற்று ஆறுதல் அளித்த நிலையில், இன்றையப் போட்டியிலும் அவர்களின் பங்களிப்பு மிக அவசியமாகிறது.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு விக்கெட்டைக்கூட ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றவில்லை. இருப்பினும், சில தவறுகளைத் தவிர்க்கும்பட்சத்தில் ராஜஸ்தான் பவுலர்கள் கொல்கத்தா பேட்ஸ்மேன்களைத் திணறடிக்க வாய்ப்புள்ளது. ஆல்ரவுண்டர் மோரிஸ் பந்துவீச்சிலும் தனது பங்களிப்பை அளித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.