மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன், சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் - டூ பிளேசிஸ் இணை களமிறங்கியது. கடந்த மூன்று போட்டிகளிலும் திணறிவந்த ருத்ராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் கொல்கத்தாவின் பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். அதற்கு பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ருத்ராஜ், ஸ்கோயர் லெக் திசையில் விளாசிய சிக்சரே சான்று.
டூ பிளேசியும் அவருக்கு துணை நிற்க, சென்னை அணி 5.3 ஓவரிலேயே அரைசதம் அடித்து கெத்து காட்டியது.
நாகர்கோட்டி வீசிய 11ஆவது ஓவரில் 16 ரன்கள், பிரசித் கிருஷ்ணா வீசிய 12ஆவது ஓவரில் 17 ரன்கள் என்று இருவரும் கொல்கத்தாவை வெளுத்து வாஙகினர்.
ரூத்ராஜ் 33 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது, வருண் சக்கரவர்த்தியிடம் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ருத்ராஜ் 42 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 64 ரன்களைக் குவித்தார். ருத்ராஜ் - டூ பிளேசிஸ் இணை 115 ரன்களை எடுத்திருந்தது.
அதன்பின், மொயின் அலியும் டூ பிளேசிக்கு துணை நின்று ஆடினார். சற்றுநேரம் அதிரடி காட்டிய மொயின் அலி 2 சிக்சர், 2 பவுண்டரிகள் என 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து நரைன் சுழலில் வீழ்ந்தார்.