சென்னை: ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து மும்பை அணி தொடக்க வீரர்களாக ரோஹித், டி காக் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 2(4) ரன்களில் ஆட்டமிழந்து அதி்ர்ச்சியளிக்க, இதனையடுத்து சூர்யகுமார் களமிறங்கினார்.
ரோஹித் - சூர்யகுமார் இணை டெல்லி அணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க, மும்பை அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 55 ரன்கள் குவித்தது.
அதையடுத்து, சூர்யகுமார் 24(15) ஆவேஷ் கான் பந்துவீச்சில் நடையைக் கட்ட ஆட்டத்தில் டெல்லி அணியின் கைகள் ஓங்க ஆரம்பித்தது. சூர்யகுமார் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 67-2 என்று இருந்தது.
மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேப்டன் ரோஹித் 44(30) ரன்களில் அமித் மிஸ்ரா சுழலில் அவுட்டாகி தனது அரைசதத்தை தவறவிட்டார். அதே ஓவரில் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களம் கண்ட பவர் ஹிட்டர்களான குர்னால் பாண்டியா 1(5) ரன்னிலும், பொல்லார்ட் 2(5) ரன்னுகளிலும் என ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்ப, மும்பை அணி 84-6 என்ற நிலைமையில் தத்தளித்தது.
இஷான் கிஷன், ஜெயந்த் யாதவ் இருவரும் சற்றுநேரம் தாக்குப்பிடித்தனர். இறுதிநேரத்தில் இருவரும் தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்தது.
டெல்லி அணி தரப்பில் அமித் மிஸ்ரா 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.