சென்னை: ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஆர்சிபி தொடக்கவீரர்கள் கோலி, படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க கேப்டன் மோர்கன், வருண் சக்கரவர்த்தியிடம் ஓவரை கொடுத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே கோலி, ராகுல் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 6 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே கோலி எடுத்திருந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில், ராஜத் பட்டீதர் 1(2) ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும், தேவ்தத் படிக்கலும் அணியை சரிவிலிருந்து மீட்டது மட்டுமில்லாமல் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர்.
மேக்ஸ்வெல், ஷகிப் அல் ஹசான், வருண் சக்கரவர்த்தி, கம்மின்ஸ் என அனைவரின் பந்துவீச்சையும் தெறிக்கவிட்டார். இதனால் மேக்ஸ்வெல் 28 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
நிதானமாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 25 (28) ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் வெளியேறினார்.