ஐதராபாத் : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த 14வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதரபாத் அணியின் கேப்டன் எய்டென் மார்க்ரம் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
பஞ்சாப் அணிக்கு தொடக்கம் முதலே வேதனை தரும் சூழலாக அமைந்தது. அந்த அணி ரன் கணக்கை துவங்கும் முன்னரே விக்கெட் கணக்கை தொடங்கியது. புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் பஞ்சாப் தொடக்க வீரர் பிரபிசிம்ரான் ரன் ஏதுவுமின்றி எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார்.
மறுபுறம் விக்கெட் வீழ்ச்சி நடந்து கொண்டு இருந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பஞ்சாப் கேப்டன் தவான் நங்கூரம் போல் நிலைத்து நின்று எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்தார். அவருக்கு உறுதுணையாக சாம் கரண் (22 ரன்) மட்டும் நிலைத்து ஆடினார்.
மற்றபடி மேத்யூ ஷார்ட் 1 ரன், ஜித்தேஷ் 4 ரன், சிக்கந்தர் ராசா 5 ரன், ஷாருக்கான் 4 ரன், ஹர்தீப் பரார் 1 ரன் என சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தவான் 1 ரன்னில் தனது சதத்தை கோட்டவிட்டார். முதல் இன்னிங்சின் கடைசி பந்தில் சிக்சர் அடித்த தவான் 99 ரன்கள் மட்டும் சேர்த்து ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை நூலிழையில் கோட்டை விட்டார்.