ஹைதராபாத்:ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் மற்ற அணிகளுக்கான பிளே ஆஃப் வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது என்பதைப் பார்க்கலாம். (இன்று (மே 14) ராஜஸ்தான் - பெங்களூரு போட்டி தொடங்குவதற்கு முந்தைய நிலவரம்)
குஜராத்:16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சிறிது காத்திருக்க வேண்டியுள்ளது. நாளை (மே 15) சன் ரைசர்ஸ் மற்றும் மே 21ம் தேதி பெங்களூரு அணிகளுடன் குஜராத் அணி மோதுகிறது.
சென்னை: 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, கொல்கத்தாவுடன் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதலிடத்துக்கு முன்னேறும். பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் நெருங்கும். மே 14ம் தேதி கொல்கத்தா, மே 20ல் டெல்லி அணியுடன் சென்னை அணி விளையாடுகிறது.
மும்பை:14 புள்ளிகளைப் பெற்றுள்ள மும்பை அணி, 3வது இடத்தில் நீடிக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல, இனி வரும் இரண்டு ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில், மே 16ல் லக்னோ, மே 21ம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
லக்னோ: புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள லக்னோ அணி 13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளைப் பெற முடியும். இது அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல உதவும். மே 16ம் தேதி மும்பை மற்றும் மே 20ல் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது லக்னோ.
ராஜஸ்தான்: 12 புள்ளிகளைப் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி 5வது இடத்தில் நீடிக்கிறது. இனி வரும் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளைப் பெறும். எனினும், பிற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (மே 14) பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் ராஜஸ்தான், வரும் 19ம் தேதி பஞ்சாப் அணியுடன் விளையாடுகிறது.
பஞ்சாப்: 12 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது. சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியதால் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது. இனி வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளைப் பெற முடியும். மே 17ம் தேதி டெல்லி, மே 19ல் ராஜஸ்தானை பஞ்சாப் எதிர்கொள்கிறது.
பெங்களூரு:10 புள்ளிகளைப் பெற்றிருக்கும் பெங்களூரு அணி 7வது இடத்தில் உள்ளது. இனி வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதேநேரம் பிற அணிகளின் முடிவுகளுக்காகவும் காத்திருக்க வேண்டியுள்ளது. இன்று ராஜஸ்தான் ராயல்ஸ், மே 18ல் சன் ரைசர்ஸ், மே 21ல் குஜராத் அணியுடன் மோதுகிறது, பெங்களூரு அணி.
கொல்கத்தா:10 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இனி வரும் 2 போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். எனினும், கொல்கத்தா அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்து விலகியதாகவே பார்க்கப்படுகிறது. இன்று சென்னை அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா மே 20ம் தேதி லக்னோவுடன் மோதுகிறது.
ஹைதராபாத்:8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது. இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அதில் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் சிரமம்.