மும்பை:நடப்பு சீசனில் 10 போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றதுடன், 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 10 புள்ளிகளுடன் அந்த அணி 6ம் இடத்தில் உள்ளது. கடைசியாக சென்னையுடன் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் ரன் குவிக்க தடுமாறுகிறார். சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்காமல் 3வது வீரராக விளையாடினார். எனினும் டக் அவுட்டாகி ஏமாற்றினார். அதேவேளையில் இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், டிம் டேவிட், திலக் வர்மா ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் நேஹல் வதேராவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது.
மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் டெத் ஓவர்களில் கவனம் செலுத்துவது அவசியம். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆறுதல் தருகிறார். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா பந்துவீச்சு எதிரணிக்கு சவாலாக இருக்கும். அவர் நடப்பு சீசனில் 17 விக்கெட்களை எடுத்துள்ளார். எனினும் பிற பந்துவீச்சாளர்கள் இன்னும் 10 விக்கெட்களை கூட எடுக்கவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பையை போலவே 10 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் அந்த அணி 5வது இடத்தில் உள்ளது. விராட் கோலி, கேப்டன் டுபிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோரை நம்பித்தான் பேட்டிங் உள்ளது. நடப்பு சீசனில் 511 ரன்களை குவித்து டுபிளெஸ்ஸி நம்பிக்கை தருகிறார். ஆனால் இந்த 3 விக்கெட்களையும் இழந்துவிட்டால் பேட்டிங் ஆட்டம் கண்டு விடும்.