துபாய்: ஐபிஎல் 2021 சீசனின் சாம்பியன்ஷிப் பட்டத்தை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது. 2010, 2011, 2018ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிஎஸ்கே கோப்பையைத் தட்டித்தூக்கியுள்ளது.
துபாய் பன்னாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
சீறிய சிஎஸ்கே
இதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய சென்னை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக டூ பிளேசிஸ் 86 ரன்களையும், மொயின் அலி 37 ரன்களையும் குவித்தனர். கேகேஆர் பந்துவீச்சில் நரேன் 2 விக்கெட்டுகளையும், மவி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய கேகேஆர் அணிக்குத் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், கில் இருவரும் சிறப்பாக விளையாடி 10 ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் நிலைத்து ஆடினர். முதல் விக்கெட்டாக வெங்கடேஷ் ஐயர் வெளியேறிய பிறகு அடுத்த ஐந்து ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து கேகேஆர் சிஎஸ்கேவிடம் சரணடைந்தது.
கேகேஆர் கெத்து - தோனி
ஷர்துல் தாக்கூர், ஜடேஜா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சும், தீபக் சஹார், ஹசில்வுட் ஆகியோரது கட்டுக்கோப்பும் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக டூ பிளேசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருது ஹர்ஷல் படேலுக்கு வழங்கப்பட்டது.
மேலும், அதிக ரன்களைக் குவித்த பேட்டர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் நிறத் தொப்பியை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் (632 ரன்கள்), அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை ஹர்ஷல் படேலுக்கும் (32 விக்கெட்டுகள்) வழங்கப்பட்டுள்ளன.