ஹைதராபாத்: விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 25) நடைபெறும், 35வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 4 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
சீறும் டைட்டன்ஸ்:லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற கடந்த ஆட்டத்தில், குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் சஹா 47 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும், நடப்பு சீசனில் தனது பங்களிப்பை சிறப்பாகவே கொடுத்து வருகிறார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 228 ரன்களை குவித்துள்ளார். சராசரி 38 ரன்கள் ஆகும். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசினார். இதே ஃபார்மில் அவர் விளையாடினால், குஜராத் அணி நல்ல ஸ்கோரை எட்ட முடியும். டேவிட் மில்லர், ராகுல் திவேட்டியா, விஜய் சங்கர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். இன்றைய போட்டி ஐபிஎல்-ல் அவர் விளையாடும் 100வது ஆட்டம் ஆகும். லக்னோ அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா கச்சிதமாக பந்துவீசி வெற்றி தேடி தந்தார். அவரிடம் அதே ஆட்டத்தை இன்றும் எதிர்பார்க்கலாம். ரஷீத் கான் சுழலும் அணிக்கு வலுசேர்க்கிறது. ஜோஸ்வா லிட்டில், ஜெயந்த் யாதவ், ஸ்ரீகர் பரத், சாய் சுதர்சன், ஷிவம் மாவி ஆகியோர் இம்பேக்ட் வீரர்கள் பட்டியலில் உள்ளனர். அத்துடன் இன்றைய போட்டி அகமதாபாத்தில் நடைபெறுவது குஜராத் அணிக்கு கூடுதல் பலம்.
பந்துவீச்சு கவலை: மும்பை அணியில் பேட்டிங் ஓரளவுக்கு வலுவாக இருந்தாலும், பந்துவீச்சு மோசமாக உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர், பெஹ்ரன்டார்ஃப், கேமரூன் க்ரீன், ஆர்ச்சர் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். குறிப்பாக அர்ஜூன் டெண்டுல்கர் 3 ஓவர்களில் 48 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதில் 4 வைட், ஒரு நோ பால் அடங்கும். பந்துவீச்சில் அவர் இன்னும் முன்னேற்றம் காண்பது அவசியம். எனினும் சுழற்பந்து வீச்சாளர்கள் பியூஷ் சாவ்லா, ஷோகீன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.