சென்னை:நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ளது. 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்வே, கெய்க்வாட் நல்ல தொடக்கம் தருகின்றனர். மிடில் ஆர்டரில் ரகானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா வலுசேர்க்கின்றனர். டெத் ஓவர்களில் களம் இறங்கும் கேப்டன் தோனி, மட்டையை சுழற்றி அணியின் ஸ்கோரை உயர்த்துகிறார். பந்துவீச்சில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே நம்பிக்கை அளிக்கின்றனர். இலங்கை வீரர் பதிரானா டெத் ஓவர்களை சிறப்பாக வீசுவது கூடுதல் பலம்.
பென் ஸ்டோக்ஸ் வருவாரா?:காயத்தில் இருந்து குணமடைந்துள்ள பென் ஸ்டொக்ஸ் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஒருவேளை அவர் ஆடும் லெவனில் இடம்பெற்றால், மொயீன் அலிக்கு ஓய்வு தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவை சென்னை அணி வீழ்த்தினால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். மேலும், பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.
மங்கிய வாய்ப்பு:கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணியுடனான கடந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தததால், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மங்கியுள்ளது. அதிரடி வீரர்கள் ஜேசன் ராய், குர்பாஸ் கடந்த ஆட்டத்தில் நிலைத்து நின்று ஆட தவறினர். மிடில் ஆர்டரில் வெங்கடேஷ் ஐயர், ரசல், ரிங்கு சிங் வலுசேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் தமிழ்நாட்டு வீரர் வருண் சக்ரவர்த்தி நம்பிக்கை தருகிறார். 4 போட்டிகளில் 3 முறை தோனியை அவர் வீழ்த்தியுள்ளார். கொல்கத்தா அணி கடைசியாக 5 ஆட்டங்களில் விளையாடி, 3ல் வெற்றி பெற்றுள்ளது. எனினும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல, பிற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
சென்னையில் ஆட்டம்: இருஅணிகளும் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை உத்தேச அணி: டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ரகானே, அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், தீக்சனா, பதிரானா, தேஷ்பாண்டே.