அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 44வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார். நடப்பு சீசனில் 12 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. அதேநேரம் வெறும் 4 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் டெல்லி அணி உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பின் விளிம்பில் இருக்கும் டெல்லி அணி வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றால் கூட, அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்வதில் பெரும் சட்டச் சிக்கல் நிலவுகிறது.
அதேநேரம் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்து வீறுநடை போட்டு வருகிறது. மேலும் இந்த ஆட்டம் உள்ளூர் மைதானத்தில் நடைபெறுகிறது. உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் களமிறங்குவதால் குஜராத் வீரர்கள் தெம்புடனே காணப்படுகின்றனர்.
டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி கடைசி 3 ஆட்டங்களில் 2 வெற்றி கண்டபோதிலும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் அடம்பிடித்து வருகிறது. டெல்லி அணி தொடர்ந்து முன்னேற இனி வரும் 5 போட்டிகளும் முக்கியமானது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.