டெல்லி :16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக மழை குறுக்கிட்டதால், இரவு 8.15 மணிக்கு தான் டாஸ் போடப்பட்டது.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் இன்னிங்சை ஜேசன் ராய் மற்றும் லிட்டான் தாஸ் ஆகியோர் தொடங்கினர். மழையின் தாக்கம் மைதானத்தில் லேசாக காணப்பட்டது என்றே கூறலாம். இருப்பினும் பந்து வீச்சுக்கு மைதானம் ஒத்துழைப்பு வழங்கியது.
தொடக்க வீரர் லிட்டன் தாஸ் (4 ரன்) பவுண்டரி அடித்த கையோடு மைதானத்தை காலி செய்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சிக்க மறுபுறம் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினர்.
வெங்கடேஷ் ஐயர் டக் அவுட், கேப்டன் நிதிஷ் ரானா 4 ரன், மந்திப் சிங் 12 ரன், அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் 6 ரன், சுனில் நரேன் 4 ரன் என அடுத்தடுத்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். இதனிடையே அரை சதத்தை நோக்கி பயணித்த தொடக்க வீரர் ஜேசன் ராயும் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் கொல்கத்தா அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கடைசியாக களமிறங்கிய ஆந்திரே ரஸ்செல் மட்டும் மட்டையை சுழற்றி அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவினார். 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டும் குவித்த கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.