தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 DC vs MI: மும்பையை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்

சென்னை: இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

ஃப்ட்ச
ஃப்ட்ச

By

Published : Apr 20, 2021, 11:49 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், டி காக் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 2(4) ரன்களில் ஆட்டமிழந்து அதி்ர்ச்சியளிக்க, இதனையடுத்து சூர்யகுமார் களமிறங்கினார்.

ரோஹித் - சூர்யகுமார் இணை டெல்லி அணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க, மும்பை அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 55 ரன்கள் குவித்தது.

அதையடுத்து, சூர்யகுமார் 24(15) ஆவேஷ் கான் பந்துவீச்சில் நடையைக் கட்ட ஆட்டத்தில் டெல்லி அணியின் கைகள் ஓங்க ஆரம்பித்தது. சூர்யகுமார் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 67-2 என்று இருந்தது.

மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேப்டன் ரோஹித் 44(30) ரன்களில் அமித் மிஸ்ரா சுழலில் அவுட்டாகி தனது அரைசதத்தை தவறவிட்டார். அதே ஓவரில் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

அதன்பின் களம் கண்ட குர்னால் பாண்டியா 1(5) ரன்னிலும், பொல்லார்ட் 2(5) ரன்களிலும் என ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்ப, மும்பை அணி 84-6 என்ற நிலைமையில் தத்தளித்தது.

இஷான் கிஷன், ஜெயந்த் யாதவ் இருவரும் சற்றுநேரம் தாக்குப்பிடித்தனர். இறுதிநேரத்தில் இருவரும் தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

டெல்லி அணி தரப்பில் அமித் மிஸ்ரா 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு, ஷிகர் தவானும், ப்ரித்வி ஷாவும் தொடக்கம் தந்தனர். ப்ரித்வி ஷா ஏழு ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்துடன் ஷிகர் தவான் கை கோர்த்தார்.

மும்பை அணியின் பந்துவீச்சை சமாளித்த இந்த ஜோடி 50 ரன்களை எட்டியது. இந்த சூழலில், பத்தாவது ஓவரை வீசிய பொல்லார்டிடம் ஸ்மித் 33 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்மித் ஆட்டமிழந்தாலும் தனது ஆட்டத்தை தொடர்ந்த தவான் மும்பை அணியினரின் பந்துவீச்சை திறம்பட கையாண்டார். சிறப்பாக ஆடிவந்த தவான் 45 ரன்களில் ராகுல் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தவானின் டிஸ்மிஸலைத் தொடர்ந்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும், லலித் யாதவும் பேட் கோர்த்தனர். ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 17ஆவது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் ஏழு ரன்களில் பண்ட் ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டம் மும்பை கைக்கு வந்துவிட்டதாக அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இருந்தபோதும், களத்திற்கு வந்த ஹெட்மயர் மும்பை அணியினரின் பந்துவீச்சை சமாளித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். குறிப்பாக, பும்ரா வீசிய 19ஆவது ஓவரில் இரண்டு நோ பால்கள் டெல்லி அணிக்கு கிடைத்தன. ஆனாலும் கிடைத்த ஃப்ரீ ஹிட்டில் டெல்லி அணியால் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஆட்டத்தின் இறுதி ஓவரில் டெல்லி அணி ஆறு பந்துகளுக்கு ஐந்து ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது.

19ஆவது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக்கொண்ட ஹெட்மயர், பொல்லார்டு வீசிய 20ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து டெல்லி அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

பின்னர் 5 பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பொல்லார்டு வீசிய இரண்டாவது பந்து நோ பாலாக மாறியது. இதன் காரணமாக டெல்லி அணி 19.2 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பொல்லார்டு, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

ABOUT THE AUTHOR

...view details