தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

DC vs SRH: 'அடிச்சு விளையாடுங்கடா அப்ரசன்டிகளா' - டெல்லி அணிக்கு பாண்டிங் அட்வைஸ்! - ரிக்கி பாண்டிங்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கும் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவதுடன் அவர்களது பணிகளை முறையாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் ப்ரித்வி ஷா முற்றிலும் ஏமாற்றி விட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளார் பாண்டிங்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 29, 2023, 2:14 PM IST

Updated : Apr 29, 2023, 10:33 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இரவு நடைபெறும் 40வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இரு அணிகளும் நடப்பு சீசனில் மோதும் இரண்டாவது போட்டி இதுவாகும்.

ஆட்டம் காணும் பேட்டிங்: டெல்லி அணியை பொறுத்தவரை நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடிள்ள அந்த அணி, 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதிரடியாக விளையாடி ரன் சேர்க்கக் கூடிய பவர் பிளேயில் 2 விக்கெட்களை இழப்பது டெல்லி அணிக்கு பெரும் நெருக்கடியாக உள்ளது. கேப்டன் டேவிட் வார்னர் மட்டுமே நம்பிக்கை தருகிறார். அவருக்கு உறுதுணையாக நின்று விளையாட பிற வீரர்கள் தவறுவது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைகிறது.

நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 306 ரன்களை குவித்துள்ளார். ரோவ்மன் பாவெல் 3 ஆட்டங்களில் 7 ரன்கள், பில் சால்ட் 2 போட்டிகளில் 5 ரன்கள், ரோசோவ் 3 ஆட்டங்ளில் 44, மிட்செல் மார்ஷ் 5 போட்டிகளில் 31 ரன்கள் எடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளனர். பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடினால் மட்டுமே கணிசமான ரன்களை குவிக்க முடியும். பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆறுதல் தருகின்றனர்.

ப்ரித்வி ஷா மீது பாய்ச்சல்: இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடுவது அவசியம் என பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "தொடக்க வீரர் ப்ரித்வி ஷாவிடம் பெரிதும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார். 6 ஆட்டங்களில் 47 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தொடக்கத்தில் அதிரடியாக ரன் குவிக்கும் வீரரை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஒருவேளை அவர் ஆட்டமிழந்துவிட்டால், அடுத்து வரும் வீரர் அதிரடியாக விளையாடுவது அவசியம். இதுபோன்ற வீரர்களை தான் அணிக்கு தேவை. பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்" என கூறினார்.

பதிலடி கொடுக்குமா சன்ரைசர்ஸ்?: டெல்லி அணியை போலவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக, அந்த அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியுடன் ஹாரி ப்ரூக் சதம் விளாசிய நிலையில், அதன்பிறகு அவர் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டெல்லி அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், 14 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

மயங்க் அகர்வால் நம்பிக்கை அளிக்கிறார். ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, கேப்டன் மார்க்ரம், கிளாசென் ஆகியோர் நிலைத்து நின்றால் மட்டுமே டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பந்துவீச்சாளர்களும் ஏமாற்றமே அளிக்கின்றனர். புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன், ஜான்சன் ஆகியோர் ஃபார்மை இழந்து தவிப்பது, சன்ரைசர்ஸ் அணிக்கு பின்னடைவுதான்.

கடந்த போட்டியில் டெல்லி அணியிடம் சொந்த மண்ணில் ஹைதராபாத் அணி வீழ்ந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க போராடும் என எதிர்பார்க்கலாம்.

போட்டி எங்கே?: டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.

நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ளன. இரண்டு அணிகளுமே தலா 11 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனில் நடைபெற்ற ஆட்டத்தில், ஹைதராபாத் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது.

டெல்லி உத்தேச அணி:டேவிட் வார்னர் (கேப்டன்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், சர்ஃப்ராஸ் கான், மணீஷ் பாண்டே, அமன் கான், அக்சர் படேல், ரிபல் படேல், ஆன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் சர்மா.

ஹைதராபாத் அணி:ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் சர்மா, கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத்/விவரந்த் சர்மா, மார்கோ ஜான்சென், மயங்க் மார்க்கண்டே, புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன்.

மற்றொரு ஆட்டம்:முன்னதாக, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 39வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் குஜராத் 3வது இடத்திலும், கொல்கத்தா 7வது இடத்திலும் உள்ளன.

Last Updated : Apr 29, 2023, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details