ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜெயதேவ் உனத்கட் தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசி, பிருத்வி ஷா 2 (5), ஷிகார் தவான் 9 (11), ராஹானே 8(8) ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் முஸ்தாபிஷூர் ரஹ்மான் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, டெல்லி அணி 37 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி, 30 பந்துகளில் 9 பவுண்டரியுடன் அரை சதத்தைக் கடந்தார். இருப்பினும் அடுத்து அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே வீணாக ஓடி ரன்அவுட் ஆனார்.
அவர் வெளியேறிய பின், மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்காததால், டெல்லி அணி நிர்னயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் அணியில் ஜெயதேவ் உனத்கட் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபிஷூர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.