அபுதாபி: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.
வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின.
திரிபாதி, நிதீஷ் அசத்தல்
இந்நிலையில், 38ஆவது லீக் ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று (செப். 26) மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திரிபாதி 45 ரன்களும், நிதீஷ் ராணா 37 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் ஹசல்வுட், தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
டூ ப்ளேசிஸ் - ருதுராஜ்
பின்னர், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ், டூ ப்ளேசிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் நான்கு ஓவர்களில் இந்த இணை 28 ரன்களை எடுத்தது. அதற்கடுத்த இரண்டு ஓவர்களில் 24 குவித்து, பவர்பிளே ஓவரில் இந்த இணை மொத்தம் 52 ரன்களை எடுத்தது.
அதையடுத்து, ரஸ்ஸலின் முதல் ஓவரில் ருதுராஜ் 40 (28) ரன்களிலும், மறுபுறம் அதிரடி காட்டி வந்த டூ பிளேசிஸ் 43 (30) ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ரூதுராஜ் மொத்தம் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் குவித்திருந்தார்.
மிடில் ஆர்டரில் ராயுடு 10 (9), மொயின் அலி 32 (28) ரன்கள் என ஓரளவுக்கு ஸ்கோரை முன்நகர்த்தினர். கடைசி 30 பந்துகளுக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையிலும், ஆட்டம் சென்னை பக்கம் இருந்தது.
17இல் சரிந்து; 18இல் மீண்டது
ரெய்னா, தோனி, ஜடேஜா, சாம் கரன் என அடுத்தடுத்து அடித்து ஆடக்கூடிய வீரர்கள் வரிசைக்கட்டி இருந்தனர். ஆனால், 18ஆவது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார்.
இந்த ஓவரின் முதல் பந்தில் ரெய்னா 11 (7) ரன்களில் ரன்-அவுட்டாக, அடுத்து மூன்றாவது பந்தில் தோனி 1 (4) போல்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால், போட்டி பரபரப்பாகி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது.
ஜடேஜா, சாம் கரன் களத்தில் இருக்க பிரசித் கிருஷ்ணா 19ஆவது ஓவரை வீசினார். முதல் பந்தில் ஜடேஜாவும், இரண்டாம் பந்தில் சாம் கரனும் தலா 1 ரன் எடுத்தனர். மூன்றாவது பந்தை ஸ்லோ டெலிவரியாக பிரசித் வீச, அதை சிக்ஸருக்கு அனுப்பி ஜடேஜா விஸ்வரூபம் எடுத்தார். அதைத் தொடர்ந்து ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என அந்த ஓவரில் 22 ரன்கள் குவித்தார்.
சுனிலின் சுழல்
இதனால், கடைசி ஓவருக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கடும் நெருக்கடிக்குள் வீசிய சுனில் நரைன், முதல் பந்தில் சாம் கரன் விக்கெட்டை வீழத்தி, இரண்டாவது பந்தில் ரன் ஏதும் கொடுக்கவில்லை.
மூன்றாவது பந்தை சந்தித்த ஷர்துல் 3 ரன்கள் ஓடி ஆட்டத்தை சமன் செய்தார். இருப்பினும், நான்காவது பந்தில் ரன் எடுக்காத ஜடேஜா, அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். இதனால், கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் என்ற நிலையில், போட்டி மேலும் பரபரப்பானது.
ஸ்ட்ரைக்கில் தீபக் சஹார் இருக்க, கடைசி பந்தை கெரம் பந்தாக (carrom ball) சுனில் வீசினார். அந்த பந்தை மிட்-விக்கெட் திசையில் தூக்கி அடித்த சஹார், சென்னை அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
மீண்டும் சென்னை முதலிடம்
இதன்மூலம், சென்னை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு நகர்ந்துள்ளது.
கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: IPL 2021: பெங்களூரு பேட்டிங்; மும்பையில் ஹர்திக்