ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய (ஏப்ரல் 12) 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலமாக உள்ளது. 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றி, 1 தோல்வியை சந்தித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற இரு அணிகளும் வரிந்துகட்டும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
வலுவான தொடக்கம்: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ராசியான மைதானம் என்பதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தொடக்க ஆட்டத்தில் குஜராத் அணியிடம் வீழ்ந்த சென்னை, அதன்பிறகு சுதாரித்து விளையாடி வருகிறது. அதன்படி, லக்னோ மற்றும் மும்பை அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் இன்று களம் இறங்க உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை அளிக்கின்றனர்.
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 61 ரன்களை குவித்த ரஹானே, ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எட்ட முடியும். கேப்டன் தோனி தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார்.
3 வீரர்கள் அவுட்?:காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் ஆகியோர் இன்று களம் இறங்க வாய்ப்பில்லை. லேசான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மொயீன் அலியும் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. இம்மூன்று வீரர்களும் அணியில் இல்லாதது சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தீபக் சாஹருக்கு பதிலாக, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா ஆடும் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் தோனியின் எச்சரிக்கைக்கு பிறகு, மும்பையுடனான கடந்த ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் ஒரு 'நோ பால்' கூட வீசவில்லை. இன்றும் அவர்கள் கூடுதல் கவனத்துடன் பந்துவீசுவார்கள் என எதிர்பார்க்கலாம். துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், சிசாண்டா மகலா, மிட்செல் சான்ட்னர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தர முடியும்.
மிரட்டும் தொடக்க ஜோடி:ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை 4வது வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், அந்த அணி சென்னை அணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 3 அணிகளை வீழ்த்தியுள்ள ராஜஸ்தான் அணி, 3 போட்டிகளிலும் 190 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடி எதிரணியை மிரட்டுகின்றனர். இந்த ஜோடியை சென்னை பந்துவீச்சாளர்கள் பிரித்தால் தான், ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். கேப்டன் சாம்சன் கடந்த ஆட்டத்தில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தாலும் அவரும் அதிரடியாக விளையாடக் கூடியவர். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஹெட்மேயர், ரியான் பராக்கும் அதிரடியாக விளையாடினால், சென்னை அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எட்டலாம்.