மும்பை:ஐபிஎல் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் இன்று (ஏப்ரல் 8) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனில் குஜராத் அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி, மற்றொரு ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, மீண்டு வந்துள்ளது. பெங்களூரு அணியுடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காதது அந்த அணியின் ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் நோக்கில் அந்த அணி களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.
நம்பிக்கை தரும் திலக் வர்மா: கேப்டன் ரோஹித் சர்மா, இஷாந்த் கிஷண், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 48 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்த மும்பை அணி ரன் சேர்க்க தடுமாறியது. எனினும், திலக் வர்மா 84 ரன்களை குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். கேமரூன் க்ரீன், திலக் வர்மா ஆகியோர் பொறுப்புடன் விளையாடினால் கணிசமான ரன்களை குவிக்கலாம்.
அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு?: பந்துவீச்சை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக தொடர் முழுவதும் விலகியிருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் பியூஷ் சாவ்லா, ஹிருத்திக் ஷோகீன், அர்ஷத் கான் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினால் சென்னை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தலாம். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பயிற்சியின் போது காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக இதுவரை களம் இறக்கப்படாத அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த 3 ஆண்டுகளாக மும்பை அணியில் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மும்பை அணி சொந்த மண்ணில் களம் இறங்குவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.
சூர்யாவை பற்றி கவலையில்லை: மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டு கூறுகையில், "சூர்யகுமார் யாதவின் ஃபார்மை பற்றி எனக்கு கவலையில்லை. அவர் மிகச்சிறந்த வீரர். நடப்பு சீசனில் அவர் நிச்சயம் கணிசமான ரன்களை குவிப்பார். எங்கள் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி ரன்களை குவிப்பார்கள் என நம்புகிறேன்" என்றார்.
Yellow Army எப்படி?: இன்றைய போட்டி மும்பையில் நடந்தாலும், சென்னை அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். கேப்டன் தோனிக்கு, தனி ரசிகர் பட்டாளம் இருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பிளஸ். அந்த அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்வாட் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். கடந்த இரண்டு ஆட்டங்களிலும் அவர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேநேரம் வலைப்பயிற்சியின் போது அவர் காயம் அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தால், மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். குறிப்பாக மொயீன் அலி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஆறுதல் தருகிறார். கேப்டன் தோனி கடைசி கட்டத்தில் இறங்கி சிக்ஸர்களை பறக்கவிடுவது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.