சென்னை:16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31ம் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. ராஜஸ்தான், பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட 6 அணிகள் வெளியேறின.
இந்நிலையில் இன்று (மே 23) முதல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதிச்சுற்று (Qualifer 1) ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி (20 புள்ளிகள்), 2வது இடத்தில் உள்ள சென்னை அணியை (17 புள்ளிகள்) எதிர்கொள்கிறது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
நம்பிக்கை தரும் தொடக்க ஜோடி: நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 8 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதால் சென்னை அணிக்கு ரசிகர்களின் ஆதரவை சொல்லத் தேவையில்லை. கடைசியாக டெல்லி அணியுடன் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் கெய்க்வாட், (504) கான்வே (585) நம்பிக்கை அளிக்கின்றனர். இருவரும் குவிக்கும் ரன்களைப் பொறுத்தே அணியின் ஸ்கோர் அமையும்.
மிடில் ஆர்டரில் ரகானே, ஷிவம் துபே, மொயின் அலி ஓரளவுக்கு கைகொடுக்கின்றனர். ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் பேட்டிங்கில் மிரட்டக் கூடியவர். கால் மூட்டு பிரச்னையை சமாளித்துக் கொண்டு நடப்பு சீசனில் அணியை வழிநடத்தும் கேப்டன் தோனி, தன்னால் முடிந்தளவுக்கு பங்களிப்பைக் கொடுத்து வருகிறார்.
பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே (20 விக்கெட்கள்) நம்பிக்கை தருகிறார். பதிரனா டெத் ஓவர்களை சிறப்பாக வீசினாலும், வைட் பந்துகளை வீசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் விக்கெட் கீப்பரையும் தாண்டி அந்த பந்து, பவுண்டரிக்குச் சென்று விடுகிறது. இது அணிக்கு நிச்சயம் பாதகத்தை ஏற்படுத்தி விடும். தீபக் சாஹர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். தீக்சனா, மொயின் அலி, ஜடேஜா ஆகியோர் சுழலில் மிரட்டுவார்கள்.
குஜராத் எப்படி?:நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 10 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது. கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சுப்மன் கில் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். பந்து எந்த திசையில் வந்தாலும், பவுண்டரிகளாக விளாசுகிறார். அவரது விக்கெட்டை வீழ்த்துவது சென்னை அணிக்கு மிகவும் முக்கியம்.