டெல்லி: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், நாளையும் (மே 21) 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று பிற்பகல் நடைபெறும் 67வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னேறுமா சிஎஸ்கே?: நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 15 புள்ளிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. லக்னோ அணியும் 15 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், சென்னை அணியின் நிகர ரன் ரேட்டை(0.381) விட குறைவாக உள்ளதால் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திவிட்டால் சென்னை அணி தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். மேலும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிச் சுற்று 1-க்கு முன்னேறிவிடும்.
ஒருவேளை சென்னை அணி தோல்வி அடைந்தால், பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும். சென்னை அணியின் பேட்டிங்கில் கான்வே (498), கெய்க்வாட் (425), ரஹானே ஆகியோர் வலுசேர்க்கின்றனர். ஷிவம் துபே நம்பிக்கை தருகிறார்.
அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா கூடுதல் பங்களிப்பை தருவது அவசியம். கடைசி கட்டத்தில் களம் இறங்கும் கேப்டன் தோனி, தன்னால் முடிந்தளவுக்கு ரன்களை சேர்க்கிறார். பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே, பதிரனா டெத் ஓவர்களை சிறப்பாக வீசுகின்றனர். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாடினால், டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
டெல்லி அணியை பொறுத்தவரை பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. எனினும் சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். கேப்டன் வார்னர், ரோசோவ், சால்ட் ஃபார்மில் உள்ளனர். ப்ரித்வி ஷா பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசி மீண்டு வந்துள்ளார். பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, நார்ஜியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் நெருக்கடி கொடுப்பார்கள்.
ஆட்டம் எங்கே?:சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் லீக் ஆட்டம், டெல்லி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை உத்தேச அணி: கான்வே, கெய்க்வாட், ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், தீக்சனா, பதிரனா, தேஷ்பாண்டே.