சென்னை :டோனியின் 200 வது ஆட்டத்தில் வெற்றி பெற்று அவருக்கு மறக்க முடியாத நினைவை கொடுக்க முடியாமல் போனது வேதனை அளிப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா தெரிவித்து உள்ளார். ஏப்ரல் 12 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது லீக் ஆட்டம் சென்னை மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. சென்னை அணியின் கேப்டனாக டோனிக்கு இது 200வது ஆட்டமாகும். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 237 ஆட்டங்களில் டோனி விளையாடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ஆட்டத்தில் விளையாடிய வீரர் என்ற சிறப்பையும் டோனி தன் வசமாக வைத்து உள்ளார்.
டோனி இதுவரை 213 ஐபிஎல் ஆட்டங்களுக்கு கேப்டனாக பதவி வகித்து உள்ளார். 2016 ஆம் ஆண்டு சென்னை அணி இரண்டு ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு டோனி கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக தல டோனி களமிறங்கும் 200வது ஆட்டம் சொந்த ஊரான சென்னையில் நடைபெற்றது.
டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 52 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டன. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேப்டன் டோனி ஆகியோர் களத்தில் இருந்தனர்.