தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனி அடித்த சிக்ஸர்... பிளே-ஆஃப் சுற்றில் கெத்தாக நுழைந்தது சிஎஸ்கே! - srh

ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக குவாலிஃபயர் சுற்றுக்குள் முன்னேறியது.

தோனி அடித்த சிக்ஸர்
தோனி அடித்த சிக்ஸர்

By

Published : Sep 30, 2021, 11:49 PM IST

சார்ஜா:கரோனா காரணமாக பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.

இத்தொடரின் 44ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று (செப். 30) மோதியது.

மிரட்டிய ஹசில்வுட்

இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சாஹா 44 ரன்களை எடுத்தார். சென்னை அணி பந்துவீச்சில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்கள் டூ பிளேசிஸ், ருதுராஜ் ஆகியோர் மிரட்டலான தொடக்கத்தை அளித்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 75 ரன்களை எடுத்து இலக்கில் பாதி ரன்களை கடந்தது.

பாதியும் மீதியும்

பின்னர், ருதுராஜ் 45 (38) ரன்களுக்கும், மொயின் அலி 17 (17) ரன்களுக்கும், ரெய்னா 2 (3) ரன்களுக்கும், டூ பிளேசிஸ் 41 (36) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதன்பின் ஜோடி சேர்ந்த ராயுடு, தோனி ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றனர். கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி தனது அக்மார்க் சிக்ஸரை விளாசி சிஎஸ்கேவின் வெற்றியை உறுதிசெய்தார்.

இதன்மூலம், 18 புள்ளிகளைப் பெற்ற ஐபிஎல் 2021 தொடரின் பிளே-சுற்றுக்கு முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிப்பெற்றுள்ளது. மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. சென்னை அணி பந்துவீச்சில் 4 ஓவர்களில் வெறும் 24 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹசில்வுட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளைய போட்டி

ஐபிஎல் தொடரில் நாளை (அக். 1) நடைபெறும் 45ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

இதையும் படிங்க: அக். 8இல் ராமோஜி ஃபிலிம் சிட்டி திறப்பு: இது உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரம்!

ABOUT THE AUTHOR

...view details