ஹைதராபாத்:16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிற சீசன்களை காட்டிலும், நடப்பு சீசனில் கேப்டன் தோனியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமல்ல... எந்த மைதானத்தில் அவர் களம் இறங்கினாலும், ரசிகர்களின் கரவொலி விண்ணை பிளக்கிறது. பெரும்பாலான போட்டிகளில் செல்போன் டார்ச் வெளிச்சத்தை காட்டி தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர் ரசிகர்கள்.
டெல்லி அணிக்கு எதிரான கடந்த ஆட்டம் சென்னையில் நடைபெற்ற நிலையில், தோனி களம் இறங்கிய போது 'படையப்பா' படத்தின் பின்னணி இசையை ஒலிபரப்பி, தோனியை ரசிகர்கள் வரவேற்றனர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் தோனி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அதீத பாசம், சக வீரரின் மனக்குமுறலுக்கு காரணமாகி விட்டது. சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில், "நான் 7வது விக்கெட்டுக்கு களம் இறங்குகிறேன். அப்போது தோனி... தோனி என ரசிகர்கள் குரல் எழுப்புகின்றனர். நான் எப்போது ஆட்டமிழப்பேன் என காத்திருக்கின்றனர்" என சிரித்துக் கொண்டே கூறினார்.
இதுதொடர்பாக டாக்டர் ராஜ்குமார் என்பவர், தனது டிவிட்டரில் சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார். "களத்தில் தனது நிலை குறித்து ஜடேஜா சிரித்துக் கொண்டே பேசினாலும், அதில் மறைந்திருக்கும் வலி அதிகம். உங்கள் அணியின் ரசிகர்களே, உங்களது விக்கெட்டுக்காக காத்திருப்பதை நினைத்துப் பாருங்கள். இது உண்மையிலேயே அதிர்ச்சியானது" என கூறியிருந்தார்.
இந்த பதிவுக்கு ரவீந்திர ஜடேஜா லைக் கொடுத்தார். தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சென்னை அணியை விமர்சனம் செய்த பதிவுக்கு, ஜடேஜா லைக் கொடுத்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலகுகிறாரா என சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.