கரோனா நெருக்கடிக்கு மத்தியில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், கேகேஆர் - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டமானது இரண்டு கேகேஆர் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, ரத்து செய்யப்பட்டது.
இன்னும் சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதியானது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு பயோ பபுல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வீரர்களுக்கு எப்படி கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியப் பயணிகள் விமானத்திற்கு பல்வேறு நாடுகள் தடைவிதிக்கப்பட்டதையடுத்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் எப்படி தங்களது நாட்டுக்கு எப்படி திரும்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் மே 15ஆம் தேதி வரை தங்கள் நாட்டுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. தற்போது இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், நிர்வாகிகள் பாதுகாப்புடன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிசிசிஐயிடம் தொடர்புகொண்டு வருகிறோம். இந்திய பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு மே 15ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கென தனியாக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க மாட்டோம்" என்று கூறியுள்ளது.