தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'தல' தோனியிடம் சட்டையில் ஆட்டோகிராப் வாங்கிய கவாஸ்கர்! - கேப்டன் தோனி

சென்னையில் நேற்று ஐபிஎல் லீக் ஆட்டம் முடிவடைந்த பின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற போது, சிஎஸ்கே கேப்டன் தோனியிடம், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தனது சட்டையில் ஆட்டோகிராப் வாங்கினார்.

dhoni
கேப்டன் தோனி

By

Published : May 15, 2023, 1:23 PM IST

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மே 14) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா, 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு சீசனில் சென்னை அணி சொந்த மண்ணில் விளையாடும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். சென்னை அணி சொந்த ஊர் மட்டுமின்றி எங்கே சென்று விளையாடினாலும், ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்நிலையில், ஆட்டம் நிறைவடைந்த பின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சென்னை அணியின் கேப்டன் தோனி தலைமையில், மஞ்சள் படை வீரர்கள் மைதானத்தில் வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். கைகளில் பதாகைகளை ஏந்தி வந்த சென்னை அணி வீரர்கள், தமிழ் ரசிகர்கள், மைதான பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினர்.

ரசிகர்களை நோக்கி பந்தை வீசும் தோனி

இடது கால் மூட்டில் காயத்துடன் நடப்பு சீசனில் விளையாடி வரும் கேப்டன் தோனி, காலில் ஐஸ் பேக் பொருத்தியபடி நடந்து வந்தார். அப்போது மைதானத்துக்குள் ஓடி வந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் கேட்டார். இதையடுத்து சிரித்தபடியே, கவாஸ்கரின் சட்டையில் தனது கையொப்பமிட்டார் தோனி. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மைதானம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள், பந்து உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வீசினர்.

பதாகையுடன் ரகானே

கொல்கத்தா அணி வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் தோனியிடம் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டனர். மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என சிஎஸ்கே நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details