கொல்கத்தா :16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு இரண்டு போட்டிகள் நடைபெற்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானா பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவென் கான்வாய் ஆகியோர் களம் இறங்கினர். விறுவிறுப்பாக ஆடிய இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர்.
3 சிக்சர், 2 பவுண்டரி என 35 ரன்களுடன் களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் சுயேஷ் சர்மா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய ரஹானே, ஆரம்பத்தில் சிறுது தடுமாறினாலும் களத்தில் காலூன்றிய பின் அடித்து ஆடத் தொடங்கினர். அவருக்கு உறுதுணையாக இருந்து அரை சதத்தை தாண்டி விளையாடிக் கொண்டு இருந்த மற்றொரு தொடக்க வீரர் டிவென் கான்வாய் (56 ரன்) சக்கரவர்த்தி பந்துவீச்சில் கேட்சாகி அவுட்டானார்.
கொல்கத்தா மண்ணில் சென்னை பட்டையை கிளப்பினர் எனக் கூறுவதற்கு உதாரணமாக அமைவது போல் அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த் அடித்து ஆடத் தொடங்கினார். இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பத் தவறாததால் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது.
ஷிவம் துபே, 5 சிக்சர், 2 பவுண்டரி என விளாசி தன் பங்குக்கு அரை சதம் அடித்த கையோடு வெளியேறினார். இறுதியில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அட்டகாசமாக இரு சிக்சர்களை பறக்க விட சென்னை அணியின் ஸ்கோர் இமாலயத்தை தொட்டது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 235 ரன்கள் எடுத்தது.
ரஹானே 71 ரன்களுடனும், டோனி 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். கொல்கத்தா அணிக்கு அதன் சொந்த ஊரிலேயே சென்னை வீரர்கள் தண்ணி காட்டி விட்டார்கள் என்று கூறும் அளவுக்கு, சென்னை அணியின் ஸ்கோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.