லண்டன்:ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஜாஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ உள்பட எட்டு இங்கிலாந்து வீரர்கள் இன்று (மே 5) நாடு திரும்பியுள்ளனர்.
உலக அளவில் புகழ் பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் நடப்பு சீசன் கரோனா அச்சுறுத்தலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் நான்கு பேர் கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளான நிலையில், கடந்த ஏப்ரலில் தொடங்கி நடைபெற்று வந்த தொடரானது நிறுத்தப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதையடுத்து தற்போது ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதால் இவ்வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான சாம் கர்ரண், மொயீன் அலி,டாம் கர்ரண், கிறிஸ் வோக்ஸ், ஜேசன் ராய், உள்ளிட்டோர் இங்கிலாந்துக்கு இன்று திரும்பியுள்ளனர்.