ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. டெல்லி, ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன. எனினும், பிற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. அதில் பெரும்பாலான அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு, பிற அணிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது.
நெருக்கடியில் பெங்களூரு: இந்நிலையில் இன்று (மே 18) நடைபெறும் 65வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ள பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட பெங்களூரு, 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை 59 ரன்னில் சுருட்டி வீசியது.
பெங்களூரு அணி இனி வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றுக்கு சிரமமின்றி முன்னேற முடியும். அடுத்த சுற்றுக்கு முன்னேற பெங்களூரு அணிக்கு 30.7 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் அந்த அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
டுபிளெஸ்ஸி, விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். லோம்ரோர், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர். மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியை காட்டினால், நல்ல ஸ்கோரை எட்ட முடியும். பந்துவீச்சில் முகமது சிராஜ், பர்னல் எதிரணிகளை மிரட்டுகின்றனர். கரண் சர்மா, வைசாக் முழு பங்களிப்பை கொடுத்தால் சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி தரலாம்.