தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ராஜஸ்தானை பந்தாடிய பெங்களூரு: 112 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி! சொந்த ஊரில் மண்ணை கவ்விய ராயல்ஸ்! - பெங்களூரு அணி 112 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 59 ரன்களுக்கு சுருண்டது. புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்த பெங்களூரு அணி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Banglore won
பெங்களூரு வெற்றி

By

Published : May 14, 2023, 8:12 PM IST

Updated : May 14, 2023, 8:19 PM IST

ஜெய்ப்பூர்:ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளெஸ்ஸி, பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் டுபிளெஸ்ஸி - கோலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தது.

பின்னர் டு பிளெஸ்ஸியுடன், மேக்ஸ்வேல் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினர். டு பிளெஸ்ஸி 55, மேக்ஸ்வெல் 54 ரன்களில் வெளியேறினர். லோம்ரோர் 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். இதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அனுஜ் ராவத் 11 பந்துகளில், 29 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ராவத் 29, பிரேஸ்வெல் 9 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் ஆடம் ஸம்பா, ஆசிப் தலா 2 விக்கெட்கள், சந்தீப் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் இருவருமே டக் அவுட்டாகினர். கேப்டன் சஞ்சு சாம்சன் 4, ஜோ ரூட் 10, படிக்கல் 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெங்களூரு வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜூரேல் 1, அஸ்வின் 0, ஸம்பா 2, ஆசிப் 0 என விக்கெட்டை பறிகொடுத்தனர். ஹெட்மேயர் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

10.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பார்னல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பிரேஸ்வெல், கரண் சர்மா தலா 2 விக்கெட்களை எடுத்தனர். சிராஜ், மேக்ஸ்வெல் ஒரு விக்கெட் எடுத்தனர். பார்னலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

3வது குறைந்த பட்ச ஸ்கோர்: ராஜஸ்தான் அணி எடுத்துள்ள 59 ரன்கள், ஐபிஎல் வரலாற்றில் 3வது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். 2017ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணி எடுத்த 49 ரன்கள் தான் மிகவும் குறைந்தபட்ச ரன் ஆகும். 2009ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 58 ரன்கள் எடுத்திருந்தது. இது 2வது குறைந்தபட்ச ஸ்கோர்.

ரன் ரேட்டில் முன்னேற்றம்: இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 7வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும் அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.345ல் இருந்து +0.166 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் +0.63ல் இருந்து +0.140 ஆக சரிந்துள்ளது.

Last Updated : May 14, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details