தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அனைத்துவகை போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ஏபி டிவில்லியர்ஸ் - ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

x
x

By

Published : Nov 20, 2021, 6:28 AM IST

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் உள்ளிட்ட சில தொடர்களில் மட்டும் ஆடிவந்தார். இவரை ரசிகர்கள் ‘மிஸ்டர் 360’ என்றழைப்பர். இந்நிலையில், தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக தனது ட்விட்டரில் ஏபி டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

அதில், "இது ஒரு நம்ப முடியாத பயணம், ஆனால் நான் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற முடிவுசெய்துள்ளேன். என் சகோதர்களுடன் விளையாட ஆரம்பித்து, முழு மகிழ்ச்சியுடனும் கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இப்போது 37 வயதாகிவிட்டது எனக்கு. முன்புபோல் அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை.

கிரிக்கெட் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தது. டைட்டனுக்காக, புரோட்டீசுக்காக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக, உலகம் முழுவதும் விளையாடினாலும் கிரிக்கெட் எனக்கு கற்பனை செய்ய முடியாத அனுபவங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்துள்ளது. அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

நான் பயணித்த அதே பாதையில், என்னுடன் பயணித்த அணியினர், எதிரணியினர், ஒவ்வொரு பயிற்சியாளர், ஒவ்வொரு பிசியோ தெரபிஸ்ட்டுகள், ஒவ்வொரு ஊழியர் உள்ளிட்ட யாவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் நான் விளையாடிய எல்லா இடங்களிலும் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி.

கடைசியாக எனது பெற்றோர், சகோதரர்கள், என் மனைவி டேனியல்லே, என் குழந்தைகள் செய்த தியாகங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். எங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை முதலிடத்தில் வைக்கக் காத்திருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஏபி டிவில்லியர்ஸின் இந்த அறிவிப்பை அடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது சமூக வலைதளப்பக்கத்தில், "ஏபி டிவில்லியர்ஸ் உங்கள் ஓய்வு என் இதயத்தைப் புண்படுத்தியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த வீரரும், உத்வேகம் தரக்கூடிய வீரும் நீங்கள்தாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக நீங்கள் வழங்கிய பங்களிப்பை நினைத்து நீங்கள் பெருமைப்படலாம் நமது பந்தம் விளையாட்டிற்கு அப்பாற்பட்டது. இது தொடரும்.

உங்கள் முடிவு என் இதயத்தை நொறுக்கிவிட்டது. இருப்பினும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த முடிவையே நீங்கள் எடுப்பீர்கள் என்பதை நான் அறிவேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல் டி20 உள்ளிட்ட லீக் தொடர்களில் மட்டும் விளையாடிவந்த நிலையில் தற்போது அதிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டுமுதல் ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் ஏறக்குறையை பத்து சீசன்களாக அந்த அணிக்கு விளையாடி நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்தார்.

ஏபி டிவில்லியர்ஸின் இந்த அறிவிப்பையடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்துகளையும் தங்களது வருத்தத்தையும் கருத்துகளாகப் பதிவிட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பிபிஎல் தொடரிலிருந்து ஏபிடி விலகல்!

ABOUT THE AUTHOR

...view details