ஹைதராபாத்:16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், கேப்டன் தோனி தலைமையிலான சென்னை அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. நள்ளிரவு 2 மணி வரை ஆட்டம் நடைபெற்றதால், தூக்கத்தை பொருட்படுத்தாத ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகமதாபாத் மைதானத்தில் பெரும்பாலும் சென்னை ரசிகர்களே திரண்டிருந்த நிலையில், சிலர் உணர்ச்சி மிகுதியில் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர். போட்டி நடைபெற்ற அகமதாபாத் மட்டுமின்றி, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளி பெரு நகரங்களில் வீதியில் திரண்ட ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். சென்னையில் முக்கிய வீதிகளில், ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நள்ளிரவிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்தால், உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில், தொலைக்காட்சியில் ஐபிஎல் பைனல் போட்டியை கண்டுரசித்த ரசிகர்கள், சென்னை அணியின் வெற்றியை கொண்டாடினர். ஜடேஜா 4 ரன்கள் அடித்து வெற்றி தேடி தந்ததை கண்ட ரசிகர்கள், மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தோனி... தோனி..., ஜடு... ஜடு... என உற்சாக குரல் எழுப்பி மகிழ்ந்தனர்.
இதுமட்டுமின்றி சில ரசிகர்கள் வெறித்தனமான உணர்வுடன் வெற்றியை கொண்டாடினர். சென்னை அணி வெற்றி பெற்றதும் உற்சாக மிகுதியில் இருந்த ரசிகர் ஒருவர், தன்னிலையை மறந்து அறையின் கதவை ஓங்கி அடித்து அலறினார். அவரை சக நண்பர்கள், ஆசுவாசப்படுத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.