மும்பை: விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 22) நடைபெறும் 31வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. தொடக்கத்தில் பெங்களூரு, சென்னை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த மும்பை டெல்லி, கொல்கத்தா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தும்.
கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் க்ரீன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நடுவரிசையில் திலக் வர்மா, டிம் டேவிட் நல்ல பங்களிப்பை கொடுத்தால் கணிசமான ரன்களை சேர்க்கலாம்.
இன்றாவது வருவாரா ஆர்ச்சர்?:பந்துவீச்சை பொறுத்தவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்றைய போட்டியில் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முழங்கையில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் குணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற வலைப்பயிற்சியிலும் அவர் பங்கேற்றார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் விக்கெட் வீழ்த்தி, ஐபிஎல் வரலாற்றில் முதல் விக்கெட்டை சாய்த்தார் அர்ஜூன் டெண்டுல்கர். அந்த உத்வேகத்துடன் அவர் இன்று களம் இறங்குவார் என எதிர்பார்க்கலாம். பெஹ்ரென்டார்ஃப், மெரிடித், பியூஷ் சாவ்லா ஆகியோரும் பந்துவீச்சி பலம் சேர்க்கிறார்கள். அத்துடன் மும்பை அணி சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.
கேப்டன் தவான் அவுட்: பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் ஷிகர் தவான் தோள்பட்டை காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் விளையாட மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக இளம்வீரர் சாம்கரன் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிகர் தவான் விளையாடாதது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக இருக்கும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தவான் முழு உடல் தகுதி பெறுவார் என பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் கான்சால்வேஸ் தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 3 வெற்றி, 3 தோல்வியை சந்தித்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை பெற்ற சிக்கந்தர் ராசா, பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறக்கப்படவில்லை. எனவே அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால் பிற வீரர்கள் ரன் சேர்க்க தவறுகின்றனர். பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே, நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.