மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று (மே 12) நடக்கும் 57வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 3 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள அந்த அணி, 16 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மிரட்டும் பேட்டிங்: குஜராத் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, எதிரணிகளை மிரட்டும் வகையில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா, சுப்மன் கில் வலுசேர்க்கின்றனர். லக்னோ அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை சேர்த்தது. மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா நம்பிக்கை அளிக்கின்றனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை முகமது ஷமி, ரஷீத் கான் ஃபார்மில் உள்ளனர். இருவரும் தலா 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். அல்சாரி ஜோசப், நூர் அகமது, மொகீத் சர்மா ஆகியோரும் எதிர்பார்த்த பங்களிப்பை அளிக்கின்றனர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் குஜராத் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், வெற்றிக்காக போராடும்.
மீண்டு வருவாரா ரோஹித்?: இந்நிலையில் தொடக்கத்தில் தடுமாறிய மும்பை அணி, மீண்டு வந்துள்ளது. 11 போட்டிகளில் பங்கேற்றுள்ள அந்த அணி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் அந்த அணி 4வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 200 ரன்கள் இலக்கை 16.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. கேப்டன் ரோஹித் சர்மா நிலைத்து நின்று விளையாட தவறுகிறார். கடைசி 5போட்டிகளில் 12 ரன்கள் எடுத்துள்ள அவர், 3 முறை டக்அவுட் ஆகியுள்ளார். அவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம்.