கொல்கத்தா: 16வது ஐபிஎல் தொடரின் Rivalry week போட்டிகள் வரும் 16ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு முக்கியமானவை என்பதால், ஒவ்வொரு போட்டி மீதான எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது. அந்த வகையில் இன்று நடைபெறும் 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
வெற்றி பெற வேண்டிய கட்டாயம்: நடப்பு சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று 8வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல குறைந்தது 16 புள்ளிகள் தேவை என்கிற பட்சத்தில், இனி வரும் 4 போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேட்டிங்கில் ஜேசன் ராய்க்கு, குர்பாஸ் உறுதுணையாக இருந்தால் நல்ல தொடக்கம் அமையும். வெங்கடேஷ் ஐயர் நிலைத்து நின்று ஆட வேண்டும். கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரசல் நம்பிக்கை தருகின்றனர்.
பந்துவீச்சில் ஷர்துல் தாகூர், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். கடைசியாக ஹைதராபாத் அணியுடன் மோதிய கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டம் வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதால் கொல்கத்தா அணி வெற்றிக்காக போராடும். மேலும் சொந்த மண்ணில் அந்த அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
பஞ்சாப் எப்படி?: பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. கடைசியாக மும்பை அணியுடனான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி, வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது. கேப்டன் தவான், லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா அணிக்கு வலுசேர்க்கின்றனர்.