ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியுடன் நடைபெற்ற கடந்த ஆட்டத்தில் 257 ரன்களை குவித்து மிரள வைத்தது லக்னோ அணி.
பேட்டிங் பட்டாளம்:கேப்டன் கே.எல்.ராகுல், ஹெட் மேயர்ஸ், படோனி, நிகோலஸ் பூரன் என வலிமை வாய்ந்த பேட்டிங் பட்டாளம் லக்னோவுக்கு பிளஸ். பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஸ்டொய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். ஆனால் பந்துவீச்சின் போது அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்த போது பெரிய அளவில் பாதிப்பில்லை. இருப்பினும் இன்றைய போட்டியில் அவர் களம் இறங்குவது சந்தேகம் தான்.
ஒருவேளை ஆடும் லெவனில் ஸ்டொய்னிஸ் இடம்பெறாவிட்டால், லக்னோ அணிக்கு சற்று பின்னடைவு தான். அவருக்கு பதிலாக குயின்டான் டி காக் களம் இறக்கப்படலாம். எனினும், சொந்த மண்ணில் லக்னோ அணி விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். பந்துவீச்சில் ஆவேஷ் கான், குருணல் பாண்ட்யா, ரவி பீஷ்னோய் நம்பிக்கை தருகின்றனர்.
நம்பிக்கை தரும் மூவேந்தர்கள்: பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. டுபிளெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், கடந்த சில போட்டிகளில் பெங்களூரு அணியை கேப்டனாக விராட் கோலி வழிநடத்தி வருகிறார். பேட்டிங் மட்டுமே செய்யும் டுபிளெஸ்ஸி, அடுத்த இன்னிங்சில் ஓய்வெடுக்கிறார். பெங்களூரு அணியை பொறுத்தவரை டுபிளெஸ்ஸி, விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றனர்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சபாஸ் அகமது, லோம்ரோர், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே, கணிசமான ரன்களை குவிக்க முடியும். கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், சொந்த மண்ணில் பெங்களூரு அணி தோற்றது. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.